தியாக திலிபனின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாதுகாப்பு செயலாளரை எச்சரித்த வே. இராதாகிருஷ்னன்.

தமிழர்களால் தியாக தீபம் என போற்றப்படும் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நோயாளியாக இருந்ததன் காரணமாகவே திலீபன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்ததாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போது இராதாகிருஸ்ணன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்துவதை போல ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்கள் போதைவஸ்து வியாபாரிகளுடன் திலீபனை ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளமை அவருடைய போராட்டத்தையும் அவர் சார்ந்த சமூகத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தை வெற்றி கொண்ட இன்றைய ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது கூட இவ்வாறான கருத்துக்களை வெளியிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பொறுப்பான பதவியில் இருக்கின்றவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற போது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திலீபனின் உண்ணாவிரத போராட்டம் என்பது அகிம்சை வழியிலான ஒரு போராட்டமாகும் எனக் குறிப்பிட்ட வேலுசாமி இராதாகிருஸ்ணன், அகிம்சை போராட்டத்தின் மூலமாகவே இந்தியாவிற்கு மகாத்மா காந்தி விடுதலையை பெற்றுக் கொடுத்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூசா முகாமில் உண்ணாவிரத போராட்டம் இருக்கின்றவர்களின் கோரிக்கைகள் வேறு என்பதையும் அன்று திலீபன் உண்ணாவிரதம் இருந்த போராட்டத்தின் கோரிக்கை வேறு என்பதை அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.

திலீபன், தான் சார்ந்த சமூகத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராகவே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பாதுகாப்பு செயலாளர் இது தொடர்பில் ஒரு தவறான தகவலை கூறுவதற்கு முற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திலீபனின் நேர்மையான போராட்டத்தை உலகமே அறியும் என்பதுடன் அவர் முன்வைத்த கோரிக்கைகளை அன்று இருந்த அரசாங்கம் செவிசாய்க்க மறுத்ததன் காரணமாகவே வடக்கு கிழக்கில் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டதாகவும் அறிக்கை மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்றைய அரசாங்கம் அன்று வடக்கு கிழக்கு இளைஞர்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரு சரியான தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தால் இந்த நாட்டில் ஆயுத போராட்டம் ஒன்று நடைபெற்றிருக்காது எனவும் இராதகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அது நடைபெறாத காரணத்தினாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய ஒரு துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டது எனவும் எனவே திலீபனின் அந்த அகிம்சை போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முயற்சி செய்யக் கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!