கொழும்பின் போக்குவரத்து விதிகளில் மாற்றம்!

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு இரண்டு ஒழுங்கைகள் வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான நான்கு வீதிகளில் புதிய போக்குவரத்து விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அவை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் பேருந்து, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் மூன்று ஒழுங்கைகள் கொண்ட வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இரண்டு ஒழுங்கைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் விளையாட்டுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இரண்டு ஒழுங்கைகள் காணப்படும் வீதியில் மோட்டார் சைக்கிள்களுக்கு அதிக சலுகை வழங்கப்படும் என அவர் கூறினார்.

புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஆரம்ப நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழமை. பொது மக்களின் நலன்கருதி பொலிஸார் எப்போதும் செயற்படுவதாகவும் அதனால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!