இந்தியாவின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது!

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்து ராஜபக்ச அரசு தப்பிக் கொள்ள முடியாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் நீதியான, சமத்துவமான, கௌரவமான, சமாதானமாக பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசின் தொடர்ச்சியான கருத்தாகவும், வலியுறுத்தலாகவும் உள்ளது.

இந்தியாவின் இந்தக் கருத்தை தற்போதைய இந்தியப் பிரதமரும், முன்னாள் பிரதமர்களும் , தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளனர். இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக, இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும்.

அதை நிறைவேற்றுவதற்கு நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, அரசமைப்பில் உள்ள சகல விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான உறுதியான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது.

இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசிடம் மீண்டும் இடித்துரைத்துள்ளார்.

அதேவேளை, இலங்கை அரசும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று இந்திய அரசிடம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது. என்ன நடக்கப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!