கடும் எச்சரிக்கையுடன் சுமனரத்ன தேரருக்கு பிணை!

மட்டக்களப்பு ஸ்ரீமங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரர் உட்பட மூவரை, 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்துள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஏற்றாவூர் சுற்றுலா நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

மேலும், கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் நீதிபதி அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பண்குடாவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் அம்பிட்டிய சுமனரத்தன தேரர் உட்பட மூவர் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பான மனுவை விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதி பிணையில் அவர்களை விடுவித்ததுடன் நவம்பர் 27ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பண்குடாவெளி பகுதியில் பௌத்த மத அடையாளம் இருப்பதாக குறித்த பகுதியில் கடந்த காலங்களில் சுமனரத்தன தேரா சென்ற நிலையில், பல சர்ச்சைகள் இடம்பெற்று நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுவருகின்றது

குறித்த இடத்தில் தொல்லியல் திணைக்களத்துடன் தொடர்புபட்ட அடையாளங்கள் இனங்காணப்பட்டமையினால், தொல்பொருள் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 21ம் திகதி அங்கு சென்ற சுமனரத்தன தேரர், தொல் பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து, கொலை அச்சுறுத்தல் விடுத்து தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கரடியானு பொலிஸார், அம்பிட்டிய சுமனரத்தன தேரர் உட்பட மூவருக்கு எதிராக அதிகாரிகளை தாக்கியமை, அவர்களை தடுத்து வைத்தமை, அதிகாரிகள் கடமையை செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டு சாட்டப்பட்டு வழக்கு தாக்குதல் செய்தனர்.

இதனையடுத்தே இன்று, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சுமனரத்தன தேரர் உட்பட மூவர் ஆஜராகினர். இதன்போது இவர்களை நீதிவான், தொல்லியல் திணைக்களத்துக்கு இடையூறு வழங்க கூடாது, பொதுமக்களை அச்சுறுத்தக் கூடாது என எச்சரித்து பிணையில் விடுவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!