அறுவை சிகிச்சையின் போது சிறுமி உயிரிழந்ததால் இளம் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தான் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் போது 7 வயது சிறுமி பலியானதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இளம் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஆர்த்தோ சிகிச்சைக்கான மருத்துவமனையின் மருத்துவர் 35 வயதான அனூப் கிருஷ்ணன், தனது கையின் நரம்பை துண்டித்துவிட்டு பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மட்டுமின்றி தமது குடியிருப்பின் குளியல் அறையின் சுவற்றில் ரத்தத்தால் மன்னித்துவிடு என அனூப் எழுதி வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். புத்தூரைச் சேர்ந்த அபியா என்ற சிறுமி அனூபுக்கு சொந்தமான ஆர்த்தோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சில மணி நேரங்களில் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பில் பெற்றோர் அளித்த புகாரில், செப்டம்பர் 23-ம் திகதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு சிறுமியை பெற்றோர் பார்க்க அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அனூப் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடனடியாக சிறுமியை வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் சிறுமி இறந்ததாக மருத்துவமனை முன்பு, சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வியாழக்கிழமையன்று மருத்துவர் அனூப், தனது கையின் நரம்பை துண்டித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறுமி இறந்த விவகாரத்தில் அனூப் மற்றும் அவரது குடும்பத்தினரை சமூக ஊடகங்களில் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!