தென் கொரியாவில் கொழுந்துவிட்டு எரிந்த 33 மாடி குடியிருப்பு: சிக்கிக்கொண்ட 130 குடும்பங்கள்!..

தென் கொரியாவில் 33 மாடி குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கி மொத்தமாக சேதமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 130 குடும்பங்கள் வசித்து வந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பானது நெருப்பு கோபுரமாக காட்சியளித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு குறித்த கட்டிடத்தின் 12-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் காற்று பலமாக வீசவே, மொத்த கட்டிடத்திலும் நெருப்பு பரவியுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், துரிதமாக செயல்பட்டு, குடியிருப்பாளர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். இருப்பினும் சுமார் 49 பேர் காயம்பட்டதாகவும், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 28-வது மாடியில் மொத்தம் 23 பேர் சிக்கியுள்ளதாகவும், கட்டிடத்தின் உச்சியில் 26 பேர் உதவி கேட்டு காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சியூட்டும் இந்த தீப்பிழம்பைக் கட்டுக்குள் கொண்டுவர உல்சன் தீயணைப்புத் துறைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பல எண்ணிக்கையிலான வாகனங்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, குறித்த கட்டிடத்தின் அருகாமையில் இருக்கும் வணிக வளாகத்திலும் இந்த தீ பரவியதால், துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள், நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணை முன்னெடுத்த பின்னரே உண்மையான காரணம் வெளிவரும் என கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!