பொறுமையினை சோதித்துவிட்டு தேரர்கள் கெட்டவர்கள் எனக்கூற வேண்டாம் – சிங்கள ராவய

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் நோக்கங்களை மையப்படுத்தியதாகும். அவர் கைது செய்யப்பட்டமையினை பல்வேறு தரப்பினர் தமது அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு ஞானசார தேரரின் பிணை வழக்கு விசாரணைக்கு நீதிபதி சமூகளிக்காது இருப்பதன் மூலம் ஞானசார தேரரை தொடர்ந்தும் சிறைச்சாலையில் வைத்திருப்பதை நோக்காகக் கொண்டு திட்டமிட்ட அடிப்படையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்த சுத்தானந்த தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பு, சிங்கள ராவய அமைப்பு, சிங்களே அபி அமைப்பு ஆகியன இணைந்து ராஜகிரியவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு உரையாற்றுகையிலேயே மாகல்கந்த சுத்தானந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரர் சிறைச்சாலையில் காவியுடையின்றி ஏழு நாட்கள் இருந்தால் அவரின் பிக்குத்துவம் மற்றும் புனித உபசம்பதா என்பன இல்லாது போகும் எனும் பிரசாரங்கள் தற்போது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை யாவும் பொய்யாகும். அத்தோடு ஞானசாரரின் கைதினை மையமாகக் கொண்டு பல்வேறு தரப்பினரால் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தயாசிறி ஜயசேகர ஞானசார தேரரை முதலாவதாக சிறைச்சாலையில் வந்து சந்தித்தார். எனின் தேரர் அந்த பதினாறு பேரைச் சேர்ந்தவரா? உதய கம்மன்பில ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கிறார். எனவே தேரர் பிவிதுறு ஹெலவுறுமய கட்சியைச் சேர்ந்தவரா? மக்கள் விடுதலை முன்னணியின் சில உறுப்பினர்களும் தேரரை சென்று சந்திக்க வேண்டும் என எம்மிடம் வினவுகின்றனர். அதனால் ஞானசார தேரர் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர் என்று கூற முடியுமா? ஞானசார தேரர் சிங்கள் பௌத்தர்களுக்காவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் மாத்திரமே செயற்பட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் பலர் தெரிவிக்pன்றனர். அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பதை இங்கு உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆனால் இந்த பௌத்த நாட்டில், சிங்களவர்கள் மற்றும் பௌத்த தேரர்களின் உரிமைகள் உறுதிசெய்யப்படுவதுடன், அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் அதற்கு ஏற்றவாறானதொரு ஆட்சியை நாம் உருவாக்குவோம் என்பதையும் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்.

மேலும் ஞானசார தேரர் சிறைச்சாலையில் காவியுடையா, கைதியுடையா அணிந்திருக்கின்றார் என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அவர் சிறைச்சாலையில் எவ்வாறான உடையுடன் இருக்கின்றார் என்பது தொடர்பில் இந்நாட்டின் தேரர்களுக்கோ, இந்நாட்டின் சிங்கள் பௌத்தர்களுக்கோ எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாத நிலையில், அவ்விடயம் தொடர்பில் ஏனையோர் அக்கறைகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வோர் அதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் பொறுமையாக இருக்கின்றோம். . அத்தோடு இந்த நாட்டில் பாரிய குற்றம்புரிந்தவர்கள் சுதந்திரமாக உள்ளனர். ஆனால் சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்ட ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மஹாநாயக்க தேரர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பௌத்தத்தை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் ஞானசார தேரர் அதற்குய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார். எனவே இவ்விடயம் தொடர்பில் எல்லோரும் கவனமாக செயற்பட வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!