வடமராட்சி தொற்றாளர்கள் இன்னமும் வீடுகளிலேயே!

வடமராட்சியில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும் இடப் பற்றாக்குறை காரணமாக அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் நேற்று நண்பகல் வரை கொரோனா தொற்றாளர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

புதன்கிழமை நள்ளிரவு வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனையில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உட்பட்ட பொலிகண்டி கிழக்கு மற்றும் சுப்பர்மடத்தைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இராஜகிராமம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் ஆக மூவர் தொற்றாளர்களாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

இவர்கள் மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு கூலர் வாகனத்தில் மீன் எடுத்துச் செல்பவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொரோனா சிகிச்சை நிலையங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக நண்பகல் வரை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதில் பொலிகண்டி பகுதியை சேர்ந்த நபர் பலாலி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் பலாலி பகுதிக்கு சென்ற இடம் தொடர்பில் சுகாதாரப் பகுதியினர் விசாரணை மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!