முன்னிலை வகிக்கும் ஜோ பிடன்: ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்க அதிபர் தேர்தலில், தபால் ஓட்டுகள் பெரும்பாலானவை ஜோ பைடனுக்கு ஆதரவாக பதிவாகியிருந்ததால், டிரம்ப்புக்கு இதில் பின்னடைவு ஏற்பட்டது. உலகமே எதிர்பாத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர்.

அதன் படி தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. மொத்தம் உள்ள, 50 மாகாணங்களில், 46-ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதிவான ஓட்டுகளின் அடிப்படையில், எலக்டோரல் காலேஜ் எனப்படும், மாகாணங்களின் வாக்காளர் குழுவினர் தான், அதிபரை தேர்வு செய்ய முடியும்.

அமெரிக்காவின் அதிபராக வேண்டுமெனில், மொத்தம் உள்ள, 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களில், 270 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
நேற்று முன்தினம் நிலவரப்படி, ஜோ பிடனுக்கு, 253 உறுப்பினர்களின் ஆதரவும், டொனால்டு டிரம்புக்கு, 213 பேரின் ஆதரவும் கிடைத்தது.

ஜார்ஜியா, பென்சில்வேனியா உள்ளிட்ட நான்கு மாகாணங்களில், ஓட்டு எண்ணும் பணி, நேற்றும் தொடர்ந்தது. பெரும்பாலான ஓட்டுகள், இ – மெயில் வாயிலாக பதிவாகியிருந்ததால், அவற்றை, சரிபார்த்து, உறுதிப்படுத்தி எண்ண வேண்டியிருந்தது.

இதனால், ஓட்டுகள் எண்ணும் பணியில், மிகுந்த தாமதம் ஏற்பட்டது. ஜார்ஜியா மாகாணத்தில், டிரம்பை விட, பல ஆயிரம் ஓட்டுக்கள் பின்தங்கியிருந்த, ஜோ பிடன், நேற்றிரவு நிலவரப்படி, டிரம்பை விட அதிக ஓட்டுக்களுடன் முன்னேறியிருந்தார்.

இதற்கு, ஜோ பைடனுக்கு ஆதரவாக, தபால் ஓட்டுக்கள் அதிக அளவில் விழுந்ததே காரணம். இதனால், ஜார்ஜியா, பென்சில்வேனியா, நவேடா, வடக்கு கரோலினா ஆகிய நான்கு மாகாணங்களில் ஏதாவது ஒன்றில் அதிக ஓட்டுகள் கிடைத்தாலும் போதும்.அதிபர் ஆவதற்கு தேவையான, 270 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களின் ஆதரவை, ஜோ பைடன் சுலபமாக பெற்றுவிடுவார்.

மேலும், பென்சில்வேனியா, நவேடா ஆகிய மாகாணங்களிலும், டிரம்பை விட, ஜோ பைடன் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளதால், ஜோ பைடனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் இது குறித்து கூறுகையில், தபால் ஓட்டுக்களில் மிகப் பெரிய அளவிற்கு தில்லுமுல்லு நடந்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்.

ஜனநாயக கட்சி என்ற பெயர் வைத்து, ஜனநாயகத்தையே திருடுகின்றனர். முக்கியமான இந்த தேர்தலில், ஓட்டுக்களை திருடி ஊழல் புரிவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் முறைகேடு நடந்திருப்பதாக டிரம்ப் கூறி வருகிறார். இதற்கிடையில், ஜார்ஜியா மாகாணத்தில், மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!