ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு : பிரதமர் மஹிந்த!

2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட தொடர்பான இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக இதுவரை 70 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உலகளாவிய ரீதியில் பலம்பொருந்திய அனைத்து நாடுகளும் இன்று கொரோனா வைரஸ் அச்சநிலையினை எதிர்கொண்டுள்ளன. இதன்காரணமாக பல நாடுகள் பொருளாதார சரிவினை எதிர்கொண்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பா தெற்காசிய நாடுகள் போன்றன. பொருளாதார சரிவினை எதிர்கொண்டுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையில் பாரிய உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

ஆனால் எமது நாட்டை பொருத்தவரை கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. அதனை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறை ஊடாக தொடர்ந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஒரு அசாதாரண சூழ்நிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இதுவரை 70 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.

பி சி ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 7 ஆயிரத்து 500 முதல் 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பி.சி.ஆர் அறிக்கை ஒன்றுக்கு ஆறாயிரம் செலவிடப்படுகின்றது.

இதன்படி இதுவரை 50 மில்லியனுக்கு மேற்பட்ட அளவில் செலவிடப்பட்டுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் போது பாரிய நிதி செலவிடப்படுகின்றது.

நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்த வருமானம் பெறும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.

சவால் நிறைந்து காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு 2020 ஆம் ஆண்டில் நாம் தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளோம். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

அது மாத்திரமல்ல குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக இதுவரை 40 ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் ஓரு இலட்சம் பேருக்கு வேலைவாய்பப்பினை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!