வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளானவர்கள் தொடர்பாக இராணுவத் தளபதி விசேட அறிவிப்பு!

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள பலர் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அங்கு பணியாற்றுகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக விசேட விமானங்கள் ஊடாக அவர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பிய இலங்கையர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில் இன்றையதினம் மேலும் 186 பேர் நாடு திரும்பவுள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பான முறையில் இந்த நடவடிக்கையினை செயற்படுத்துவதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்” என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!