மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதை தடுத்து விட்டோம்!

எவ்விதத்திலும் நாட்டினுள் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இருந்த வாய்ப்புகள் எம்மால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சுமார் 69 இலட்சம் மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். நாட்டை பாதுகாப்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. குறுகிய காலப்பகுதியில் அதனை எம்மால் செய்ய முடிந்தது. தற்போது, நாட்டு மக்கள் எவ்விதத்திலும் அச்சப்படத் தேவையில்லை.

புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவு பலவீனமடைந்த காரணத்தால் நாடு பாதுகாப்பற்ற நிலைக்குத் தளப்பட்டது. நான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்புப் பிரிவிற்கு உரிய அதிகாரிகளை நியமித்து, அவர்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தேன்.

அதேபோல், வீழ்ச்சியடைந்திருந்த புலனாய்வுப் பிரிவை மறுசீரமைத்து அதற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, எவ்விதத்திலோ நாட்டினுள் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இருந்த வாய்ப்புகள் எம்மால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, என்னை பெரும்பாலும் பௌத்த, சிங்கள மக்கள் வாக்களித்து வெற்றிப்பெற செய்தார்கள் என்பதில் ஐயம் இல்லை. பௌத்த சிங்கள மக்கள் தங்களது உரிமைகள், பாரம்பரியம் என்பன இல்லாமல் செய்யப்பட்டுவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சிங்கள பௌத்த மக்கள் அனைவரும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக செயற்பட்டிருந்தார்கள்.

மேலும், அனைத்தின மக்களுக்கும் சம உரிமையுடனும், சுதந்திரமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை எம்மால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இதேவேளை, எந்தவொரு சர்வதேச நாட்டுடனும் நட்புறவுடன் செயற்படுவதற்கு இலங்கை தயாராக உள்ளது. எந்தவொரு நாட்டுக்கும் சார்பாக அல்லாமல், அபிமானம் மிக்கதும் இறைமை மிக்கதுமான நாடு இலங்கை என்பதை மீண்டும் உலகத்துக்கு நாம் காண்பித்திருக்கிறோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!