தமிழரின் உரிமை பற்றி பேச தமிழ்த் தலைவர்களுக்கு உரிமை இல்லை!

தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சட்டத்தை மதிக்கும், சட்டதிற்கு கட்டுப்படும் சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதாள உலகக் கோஷ்டிகள், குடு வியாபாரிகளை இல்லாதொழிப்பதைப் போலவே அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் உருவாவதற்கும் தாம் இடமளிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மூன்று தசாப்த யுத்தத்தில் 27 ஆயிரத்திற்கு அதிமான இராணுவத்தை இழந்தும், பல்வாயிரம் வீரர்களை அங்கவீனர்களாக்கியும் இந்த நாட்டினை மீட்டெடுத்தாக சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் நாடாளுமன்றில் உள்ள ஒருசில தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள இனத்திற்கு எதிராகவும், தமிழ் மக்கள் மனங்களில் சிங்களவர் தொடர்பாக வெறுப்பையும், கோபத்தையும் வளர்க்கும் விதத்தில் மோசமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது பிரதேசங்களின் அபிவிருத்திகள், தேவைகள் குறித்து பேசாது எந்த வேளையிலும் சிங்கள மக்களுக்கும், இராணுவத்திற்கு எதிரான அவமான செயற்பாடுகளை உருவாக்கும் கருத்துக்களையே அவர்கள் முன்வைத்து வருவதாக சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான கீழ்த்தரமான தமிழ் அரசியல் வாதிகளின் மோசமான அரசியல் கருத்துக்களின் காரணமாகவே அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேர்ந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாம் உலகில் மிக மோசமான பயங்கரவாதிகளை அழித்த இனம் எனவும் உலகில் வேறெந்த நாடுகளும் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இன்று சபையில் மனித உரிமைகள் பேசும் தமிழர் தரப்பு, அன்று 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை காலத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “யுத்த காலத்தில் தமிழர்களை நாமே காப்பாற்றினோம், அப்போதெல்லாம் இன்று பேசும் ஒருவரைக்கூட நாம் பார்க்கவில்லை. மூன்று இலட்சம் பொதுமக்களை பணயக்கைதியாக பிரபாகரன் வைத்திருந்த வேளையில் இவர்கள் எவருமே வாய் திறக்கவில்லை.

இரண்டு இலட்சத்து 95 ஆயிரம் தமிழர்களை பாதுகாத்துக்கொண்டே யுத்தத்தை முடித்தோம். உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான போராட்டத்தை முன்னெடுத்த இராணுவம் எமது இராணுவம் என்றே உலகம் கூறுகின்றது” என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!