நிவார் சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவார் சூறாவளி, காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 213 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி, மேலும் வலுவடைந்து, எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தமிழகத்தின் கரையோர பகுதியை நோக்கி நகரும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தின் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த பகுதிகளிலுள்ள மீனவர்களை, கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!