கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் – நாட்டில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், பன்னிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம், குறித்த மரணங்கள் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 502 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 577 பேர் தொற்றுக்குஉள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 926 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக்கண்டறிவதற்காக 7 இலட்சத்து 65 ஆயிரத்து 505 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!