மஹர சிறைச்சாலை தொடர்பாக விசாரணைக்குழு அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து!

கொரோனா கொத்தணியொன்று உருவாகியதையடுத்தே, மஹர சிறைச்சாலைக்குகள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வரும் குழுநிலை விவாதத்தின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, மஹர சிறைச்சாலையில் 183 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், கைதிகளின் பாதுகாப்புக் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் ஆராய, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அது குறித்து திருப்தியடைய முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில். இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள, சுயாதீன குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்

இதேவேளை, சிறைக்கைதிகள் சிலரினால், போதை வில்லைகளை விநியோகிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே, இந்த குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், குறித்த விடயத்தை அடிப்படையாக கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில், சிலர் அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சிப்பதாக, அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷணி பெர்ணாண்டோ புள்ளே இதன்போது தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!