கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் விடுவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் இன்று காலை 5 மணிமுதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் வர்த்தக நடவடிக்கைகள் சிலவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புறக்கோட்டை பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மெனிங் சந்தை, 4 ஆம் குறுக்கு தெரு மற்றும் 5 ஆம் குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு மற்றும் ராகம ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொரளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம் சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொம்பனி தெரு வேகந்த கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் ஆகியன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட வத்தளை, பேலியகொட மற்றும் களனி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளின் சில பகுதிகள் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்திய உயன குடியிருப்புத் தொகுதி மற்றும் பேர்குஸன் தெற்கு வீதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சத செவன வீடமைப்புத் தொகுதி, சாலமுல் மற்றும் விஜயபுர ஆகிய கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்கள் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக காணப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!