உக்ரேன் நாட்டவரே 2ம் அலைக்கு காரணம் – சுதர்சிஷினி!

மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு உக்ரேன் நாட்டவர்களே காரணமாக இருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (07) கருத்து வெளியிட்ட போது இதனை தெரிவித்தார். மேலும்,

மினுவங்கொட கொத்தணி உருவான பிரன்டிக்ஸ் நிறுவன தொழிலாளர்களுக்கு இந்தநோய் பரவிய விதம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெறுகின்றது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர்களிடம் இருந்தே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அதன் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கும் போது சீதுவ ரமாதா ஹோட்டலில் தங்கியிருந்த உக்ரேன் நாட்டு விமான பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த ஹோட்டலின் பணியாளர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது அங்குள்ள பலருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கும் மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விதத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய மினுவங்கொட பிரின்டிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு மேற்குறிப்பிட்ட விதத்தின் ஊடாக வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும். பேராசிரியர் நீலிக்க பலவெக்கே வைரஸ் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் போது இப்போது நாட்டில் பரவி வரும் வைரஸானது இதற்கு முன்னர் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் வகையை சேர்ந்தவையல்லவென தெரிவித்தார்.

இப்போது பரவும் வைரஸானது ஐரோப்பிய நாடுகளில் பரவும் வைரஸூக்கு இணையானது என அவர் தெரிவித்தத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட விடயத்துக்கு இது சாட்சியாக அமைகின்றது” – என கூறினார்.

இதேவேளை கொரோனா தொற்று காரணம் தொடர்பில் விசாரணைகள் நடந்து வருவதால் மினுவாங்கொடை கொத்தணியின் மூலம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!