பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கலைப்பு? – அமைச்சர் வாசுதேவ அதிருப்தி!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாது செய்வது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆணைக்குழு பிரதமரின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளதாகவும் , இதனால் அது தொடர்பான தீர்மானங்களை பிரதமரே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான தீர்மானங்களை ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவை மூடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால், திறைசேரியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் , இவ்வாறான தீர்மானங்களினால் அரசாங்கத்துக்கு பாரிய எதிர்ப்பலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாது செய்வது தொடர்பில். தனக்கு அறிவிக்கப்படவில்லை என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த குழுவை இல்லாது செய்யாது, மறுசீரமைப்பு களை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!