சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக விசேட தீர்மானம்!

சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அனுமதிப்பதற்காக, சுகாதார மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, விமான நிலையத்தை திறந்து, சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அனுமதிப்பதற்கான திகதி, விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில், வீடியோ தொழிநுட்பத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சுகாதார வழிகாட்டல்களுடன், சுற்றுலாத் துறையை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவிக்க முடியும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தான் இது தொடர்பில் சுகாதாரப் தரப்பினருடன் கலந்துரையாடியதாகவும், சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் போது, உரிய முறைமைகள் கையாளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, உரிய வழிகாட்டல்களை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதித் தீர்மானம் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் கொவிட் 19 செயலணியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக, சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!