அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்! – பொதுஜன பெரமுன சவால்

அனைத்து மாகாண சபைகளையும் கலைத்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய முறையிலோ அல்லது பழைய முறையிலோ எந்த முறையில் தேர்தலை நடத்தினாலும் தேர்தலுக்கு முகம் கொடுக்க தயார் எனவும் சவால் விடுத்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன இளைஞர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கன்ஸ்ர விஜேசேகர இதனை தெரிவித்தார்.

‘மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைத்து ஒன்பது மாதங்களாகின்றது. அதேபோல இன்னும் இரண்டு மாதங்களில் மேலும் இரண்டு மாகாண சபைகள் கலைய உள்ளன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவை உருவாக்கியது தேர்தலுக்கான ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே. ஆனால் தற்போதுள்ள பிரச்சினை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்றார், தேர்தல் நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க முடியவில்லையெனவும் ஜனாதிபதியும் தேர்தல் நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க முடியவில்லையெனவும் கூறுகின்றார்.

அத்தோடு பிரதமர் பக்கத்திலும் தேர்தல் நடத்துவதற்கான திகதியை கூறமுடியாதென இதற்கு அப்பால் மாகாண சபை அமைச்சர் தேர்தல் முறையில் குறைபாடுகள் உள்ளது. ஆகவே தேர்தலை நடத்துவதற்கான திகதியை இந்த வருடமோ அல்லது அடுத்த வருடத்திலோ நடத்துவதற்கு முடியாதுள்ளதென கூறுகின்றார்.

ஆகவே இந்த அரசாங்கம் உள்ளூராட்சி சபையை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைத்தனர். அதன் பின்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் அரசாங்கத்தின் பிரதான இரு கட்சிகளும் பெரும் தோல்வியைக் கண்டன. அதிலும் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியும் பிரதமர் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியும் பெரும் தோல்வியைக் கண்டது. அதேபோல ஏனைய கட்சிகளும் படுதோல்வியைக் கண்டன.

ஆகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்ட பெரும் வெற்றியால் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தல் வரை நாட்டில் எவ்விதத் தேர்தலையும் நடத்தாது இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆகவே ஜனநாயகம் என்ற பெயரளவிலுள்ள தற்போதுள்ள அரசாங்கத்திற்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு எவ்வித நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார். எங்களுக்கு பலம் உள்ள தெற்கு மாகாண சபையையும் கலைத்து, அத்தோடு அனைத்து மாகாண சபைகளையும் கலைத்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான யோசனை ஒன்றை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைத்து புதிய முறையிலோ அல்லது பழைய முறையிலோ தேர்தலை நடத்துமாறு கோரிக்கையுடனான சவாலை ஏற்றுக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!