கூட்டமைப்பு கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தவை என்ன? – வியாழேந்திரன் கேள்வி?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த தீர்வுகள் எவை என்பதை பகிரங்கமாக கூற முடியுமா என பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவின் மட்டக்களப்புத் தொகுதிக்கான இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் போன்றவர்களால் பேசமுடியும் ஆனால் செயல் வடிவம் கொடுக்க முடியது என மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த தீர்வுகளும், அதிகாரங்களும், சொல்லிலடங்காதவை.

‘கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி’ எனும் பாரதியாரின் கவிதையைப்போல்தான் அடைக்கலநாதன் அவர்களின் கருத்து இருக்கின்றது. கடந்த 72 வருடகாலத்தில் அவர்கள் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தவைகள் சொல்லிலடங்காது.

அதனை வைப்பதற்கே இடமில்லாமலுள்ளது.

அன்புக்குரிய அடைக்கலநாதன் அண்ணன் உட்பட நான் பலருக்குச் சொல்லும் அறிவுரை என்னவெனில் வியாழேந்திரன் என்ன செய்கின்றார், அவர் தலை சொறிகின்றாரா, மூக்கைச் சொறிகின்றாரா என்று பார்க்காமல், வியாழேந்திரனின் சட்டியில் என்ன வேகுது என்று பாராமல் உங்கள், உங்கள் சட்டிகளில் என்ன கருகுது என்று பாருங்கள் என்பதை அன்புடன் சொல்லிக் கொள்கின்றேன்.

எனது அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றார்கள் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வருகின்றார்கள்.

அந்த மக்களுக்குத் தெரியும் அடைக்கலநாதன் போன்றவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது மக்களுக்குத் தெரியும். நாங்கள மக்களுடைய எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றிக் கொடுப்போம்.

மக்கள் எங்களிடத்தில் வீடு, வேலைவாய்ப்பு, வீதி, என்பனவற்றைப் பெற்றுத்தாருங்கள் என எங்களிடம் கேட்டார்கள். அததைத்தான் நாங்கள் தற்போது செய்து வருகின்றோம்” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!