சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை – பயங்கரவாதிகளே உள்ளனராம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் நோக்கங்கங்களுக்காகவே அரசியல் கைதிகள் என அழைக்கப்படுகின்றனர் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றுகலந்து கொண்ட போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘அரசியல் கைதிகள் என்பவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்படவில்லை என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள், எனினும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான மகஜரைக் கையளித்துள்ளார். இது என்ன நடக்கிறது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகள் என்ற எவரும் இல்லையென, மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் என்ற பதவியில் இருந்து கொண்டு உறுதியாக கூறுவதாகவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகள் என குறிப்பிட முடியாது. அவர்களை பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்றே கூறமுடியும் என்றார்.

சிறைக்கைதிகளை பால் நிலையிலும் அவர்கள் செய்த குற்றங்களின் கீழும் வகைப்படுத்தியுள்ளோம்.எனவே தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகையில் எவரும் இல்லை என்றார்.

அவ்வாறு எவராவது இருப்பார்களாயின் ஒருவரது பெயரையாவது கூற சொல்லுங்கள். எமக்கும் தெரியாமல் யாராவது தடுத்து வைத்திருப்பார்களாயின் எம்மால் அவர்கள் குறித்து உங்களுக்கு தெளிவுப்படுத்த முடியும். அரசியல் கைதிகளின் பெயர் மற்றும் இலக்கத்தை வழங்கினால் சிறைச்சாலை திணைக்களத்துக்கு வழங்கி உண்மையில் அவ்வாறு இருக்கிறார்களா? என்று தேடியறிய முடியும் என்றார்.

நாம் அரசியல் கைதிகளை தடுத்து வைக்கவில்லை. பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றே அழைக்கப்படுவர். அவர்கள் வேறு பெயர்களால் அழைக்கப்பட மாட்டார்கள். இச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களே பயங்கரவாதிகள், பயங்கரவாத சந்தேகநபர்கள் இந்த இரண்டு பெயர்களைத் தவிர

அவர்கள் வேறு பெயர்களால் அழைக்கப்பட மாட்டார்கள்.அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கூறுவதை விட,சட்டம் பலவீனமானது, கைதிகளுக்கு 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாக கூறும் சம்பந்தன், சுமந்திரன் போன்ற சட்டப் பின்னணியுடையவர்கள். சட்டத்தில் மாற்றக்கூடிய திருத்தம் தொடர்பில் தனிப்பட்ட பிரேரணையைக் கொண்டு வந்திருக்கலாம் தானே என தெரிவித்தார்.

சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர 15 அல்லது 20 வருடம் என்பது அதிகமே. இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். எனவே துரதிஸ்டமாக சிலருக்கு இது புரியாவிட்டாலும் அவர்கள் சிறைக்கைதிகளை தமது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகவும் இந்த அர்த்தத்தில் என்றால் அவர்கள் சிறைக்கைதிகளே என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!