ரஞ்சனுக்கு எதிரான தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் தீ – மால்கந்த தேருக்கு சந்தேகம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கவுள்ள சந்தர்ப்பத்தில் உயர் நீதிமன்ற கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டமை சந்தேகத்துக்குரியது என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்தார்.

கல்குடா பாசிக்குடாவிலுள்ள தனியார் உல்லாச விடுதியில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“நீதிமன்றங்களின் இதயம் என கருதப்படும் உயர் நீதிமன்றத்தில் ஒரு முக்கிய இடத்தில் தீ பற்றியது மனவேதனைக்குரியது. குறித்த தீ விபத்து தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டு மக்களுக்கு உள்ளது. கடந்த மாதங்களில் நாட்டில் தொடராக ஏற்பட்ட சம்பவங்களை பார்க்கும் போது இந்த தீ சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதற்குரிய காரணங்களில் ஒன்றுதான் நீதிமன்றத்தினை அவமதித்ததற்கும், நீதிமன்றத்தினை விமர்சித்தது தொடர்பாகவும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கவுள்ள சந்தர்ப்பத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டில் முக்கியமாக ஆச்சரியப்படக்கூடிய பல தீர்ப்புக்கள் இந்த நீதிமன்றத்தினூடாக வெளியிடப்பட காத்திருக்கின்றது.

அண்மையில் மஹர சிறைச்சாலையில் பாரிய கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தினை பயன்படுத்தி மதில்களை உடைத்துக் கொண்டு கைதிகள் தப்பி ஓடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நடவடிக்கையினை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. இதற்கு அப்பால் மூலதாரிகள் யார், இதற்கு திட்டமிட்டு உறுதுணையாக யாராவது இருந்தார்களா என்பது தொடர்பில் எமக்குள் சந்தேகம் இருக்கின்றது. அதுதொடர்பிலும் நீதிமன்ற கட்டட தீ தொடர்பிலும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டியுள்ளது.

பாதுகாப்பு தரப்பினர் இதனை சாதாரண நிகழ்வு என்று இருந்து விடாது நீதிமன்ற கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டமை தொடர்பில் பரந்த அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கேட்டுக் கொள்கின்றோம். தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் வீடியோ தொழில் நுட்பம் ஊடக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முறைப்பாட்டாளர், சாட்சி குற்றாவாளிகள் போன்றோர் அழைக்கப்படுவதில்லை. குறைந்தளவான உத்தியோகத்தர்களை நீதிமன்ற கட்டட தொகுதிக்குள் அழைத்து நடவடிக்கை இடம்பெறுவதுடன், மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதுடன், சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இத திட்டமிடப்பட்ட சதியா அல்லது தானாக நடந்த சம்பவமா என்று ஆராய வேண்டும். அவ்வாறு திட்டமிடப்பட்ட சதியாக இருந்தால் இது தொடர்பில் குற்றவாளிகளை கண்டுபிடித்து அதற்குரிய தண்டனைகளை வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உதவும் குழுவினர் மற்றும் குற்றவாளிகள் ஆகியோருக்கு தண்டனை வழங்கக் கூடிய இடமாக உயர் நீதிமன்றம் காணப்படுகின்றது. அதுமாத்திரமின்றி நாட்டின் அரசியல் யாப்புகளுக்கு விளக்கமளிக்க கூடிய இடமாகவும் காணப்படுகின்றது. அத்தோடு பல்வேறுபட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான தண்டணைகள், தீர்ப்புகள் வழங்க காத்திருக்கின்ற சூழ்நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றதானது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள படியால் இந்த சந்தேகத்தினை தீர்த்து வைக்கும் பொருட்டு இது தொடர்பில் பரந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கின்றது என்பதை நினைவு கூற விரும்புகின்றோம்.

ஏதோவொரு வகையில் ஆவணக் காப்பகத்தில் தீப்பற்றிக் கொண்டிருக்குமாக இருந்தால் பல குற்றவாளிகள் நாட்டில் நிம்மதியாக நடமாடுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதை கூறிக் கொள்கின்றேன். துரதிஸ்ட வசமாக ஆவணக் காப்பகத்தில் தீப்பற்றிக் கொண்டிருக்குமாக இருந்தால் விலைமதிக்க முடியாத நினைத்துப் பார்க்க முடியாத சேதத்தினை எதிர்பார்த்திருக்க முடியும். எனவே குறித்த விடயம் தொடர்பில் பரந்த விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” – என்றார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தவர்களில் மால்கந்த சுதத்த தேரரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!