சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா சந்திக்கவிருக்கும் அடுத்த சிக்கல்!

சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, கர்நாடகா சிறைத்துறையின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டு சிறை தண்டைனைக்காக அடைக்கப்பட்டனர்.

அவர்களது தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27-ஆம் திகதியோடு முடிவடைய உள்ளதாகக் கர்நாடக சிறைத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது.

இந்நிலையில், சசிகலா உள்ளிட்ட மூவரின் விடுதலைக்கான பூர்வாங்க வேலைகளை ஏற்கனவே சிறைத்துறை தொடங்கிவிட்டது.

குறிப்பாக ஒரு தண்டனைக் கைதியை விடுதலை செய்யும் முன்பு மாநில உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறுவது அவசியம். அந்த அடிப்படையில் கர்நாடக மாநில சிறைத்துறை, அந்த மாநில உள்துறைக்குக் கடிதமும் எழுதியுள்ளது.

இந்நிலையில் சசிகலாவின் விடுதலைக்கு முன்பாக அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை கட்டவேண்டும் என்கிற நிபந்தனை இருந்தது.

இதனால் கடந்த மாதம் அந்த தொகையை சசிகலா தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் கட்டப்பட்டது. அதே போல் இளவரசிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் கட்டப்பட்டுவிட்டது. ஆனால், சுதாகரனின் அபராதத் தொகையை இதுவரை செலுத்தவில்லை.

ஏனெனில், அவரின் உறவினர்கள் அவருக்கான தொகையைக் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதால், விடுதலைக்கான காலம் வந்தபிறகும் பணம் செலுத்தாமல் இருப்பதால் சுதாகரன் விடுதலையும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுதாகரன் மனைவி வழி உறவுகளான சிவாஜி குடும்பத்தினர் அவருக்குப் பணம் செலுத்தலாமா? என்று ஆலோசனை செய்துள்ளார்கள். விரைவில் அவர்கள் தரப்பிலிருந்து சுதாகரனுக்கான பணம் செலுத்தப்படும் என்று கூறப்படுவதால், பணம் செலுத்திய பிறகு இந்த மாத இறுதியில் சுதாகரன் விடுதலை உறுதியாகிவிடும்.

அதே நேரம் சிறைத்துறையின் கணக்குப்படி சுதாகரன் முதலிலும், அடுத்து இளவரசியும் விடுதலையாகவே வாய்ப்புள்ளது. இருவருமே ஏற்கனவே சசிகலாவை விட அதிக நாட்கள் சிறையிலிருந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சசிகலா இறுதியில் தான் விடுதலை செய்யப்படுவாராம்.

சிகலா சிறையில் கன்னட மொழி பயின்று அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி சிறைக்கைதிகளுக்கு வழங்கும் பணிகளையும் தினமும் செய்துவந்துள்ளார்.

அந்த அடிப்படையில் அவருக்குக் குறைந்தபட்ச சலுகையைச் சிறை நிர்வாகம் காட்டினால் கூட இந்த மாதமே அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பார். ஆனால் சசிகலா விவகாரத்தில் எந்த சலுகையும் காட்டக்கூடாது என்று கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கிறது. இது சசிகலா தரப்பை மிகவும் வருத்தமாக்கியுள்ளது.

மேலும், சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டாம் என்று சிலரது தரப்பிலிருந்து வந்த அழுத்தமே அவருக்குச் சலுகைகள் காட்டாமல் கர்நாடக அரசு இழுத்தடிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால், சிறையிலிருந்த வெளியே வந்தபிறகு அவர்களுக்கு எதிராக சட்டரீதியாகவே நடவடிக்கைகளை சசிகலா எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!