தண்டனைக்குள்ளான யாழ். பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தமக்கான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (4) உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த உண்ணாவிரதப் போராட்டம் யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழக வாயிலைச் சுற்றி படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் 8ம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி, கைகலப்பில் முடிந்திருந்தது.

அன்றைய தினம் இரவு வரை தொடர்ந்த முரண்பாடுகள், மூன்றாம் வருட மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் முரண் நிலையைத் தோற்றுவித்திருந்தன.

இதனையடுத்து சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட்டு விசாரணை முடிவில் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, அந்த அறிக்கை பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபையில் ஆராயப்பட்டபின், பேரவைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அதன்பின் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபைபரிந்துரைத்த தண்டனைகள் உறுதிப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, தமக்கான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரவையில் ஆராயப்பட்ட விடயங்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!