அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள்: பிரித்தானிய பிரதமர் கடும் கண்டனம்!

அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் 12 மணி நேரம் தலைநகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்புப்படையினர் மற்றும் சிறப்பு பொலிசார் தலைநகரில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிய்யுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது இழிவான செயல் என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜோன்சன், அமைதியான முறையில் அதிகாரப்பகிர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் பொலிசாருடம் மோதலில் ஈடுபட்ட காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்கள் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், காணொளி ஒன்றை தமது டுவிட்டல் பக்கத்தில் வெளியிட்ட டொனால்டு டிரம்ப், தமது ஆதரவாளர்கள் அனைவரும் குடியிருப்புக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், நீங்கள் காயம் பட்டிருப்பதை நான் அறிவேன், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியை நம்மிடம் இருந்து பறித்துள்ளனர்.
நீங்கள் அனைவரும் தற்போது வீட்டிற்கு செல்ல வேண்டும், நமக்கு அமைதியாக இருக்க வேண்டும், சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பதவியை பறிக்கும் நடவடிக்கைகளுக்கு செனட் உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!