விமான நிலைய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விசேட அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகள் ஊடாக, நாட்டில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில், இன்று கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து தெளிவுபடுத்திய போதே, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு கூறினார். இவ்விடயம் டிதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து நாட்டு மக்களுக்கும், நாட்டு மக்களிடமிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கும் தொற்று பரவாத வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆரம்ப அனுபவங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளோம். 21 ஆம் திகதி வர்த்தக விமானங்கள், பிரத்தியேக விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம்.

அத்துடன் கடல் மார்க்கமாக வருகை தரக் கூடியவர்களுக்கும் அனுமதி வழங்கவுள்ளோம்.இதன்படி சுற்றுலாப் பயணிகள், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள நபர்கள் மற்றும் இலங்கையில் வதிவிட வீசா உள்ள நபர்களும் வருகை தர முடியும்.

ஆனால் பயணிகள் வருகை தர 72 மணித்தியாலத்திற்கு முன்னர் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என உரிய விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!