மன்னாரில் இதுவரை 66 தொற்றாளர்கள்! – இம்மாதம் மட்டும் 49 பேர்.

மன்னார் மாவட்டத்தில், இதுவரை 66 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், தெரிவித்துள்ளார். இந்த மாதம் மட்டும் 49 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“ பண்டிகைக் காலங்களையொட்டி, மன்னார் மாவட்டத்தில் மக்களினுடைய நடமாட்டங்கள் அதிகரித்த காரணத்தால், தற்போது கொரோனா தொற்று மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 49 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர், மன்னார் பஸார் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போது தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘இது வரையில், மன்னார் மாவட்டத்தில் 66 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவர்.

‘அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் கதைத்ததன் அடிப்படையில் அதிகமானவர்களுக்கு மிகவும் இலகுவில் தொற்று ஏற்படவில்லை. சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறியமை, கை சுகாதாரத்தை கடை பிடிக்காமை போன்ற செயற்பாடுகள் தொற்றுக்கான மூல காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 4 கொரோனா தொற்று நோயளர்கள் மிகவும் கடுமையான பாதிப்புடன் முருங்கன், எருக்கலம்பிட்டி, பேசாலை வைத்தியசாலைகளில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர் எனவும், அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!