குருந்தூர் மலை சூலம் – ஆக்கிரமிப்புக்கு துணைபோகிறாரா மறவன்புலவு சச்சி?

குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் சூலத்தை எவரும் அகற்றவில்லை என சிவசேனை அமைப்பின் அமைப்பாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கூறியுள்ள போதும், அதனை, ஆலயத்தின் அறங்காவலர் மறுத்துள்ளார்

முல்லைத்தீவு – குமுழமுனைக்கு அண்மித்த குருந்தூர்மலை ஆதி ஐயனார் திருக்கோயில் மூலவரின் சூலம் நீக்கப்பட்டதாக வந்த செய்திகள் தவறானவை எனவும் குன்றின் உச்சியில் உள்ள சைவ வழிபாட்டு இடம் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது எனவும் குருந்தக் குன்று திருக்கோயில் அறங்காவலர் என்னிடம் தெரிவித்தார்கள் என மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரம் பெற விரும்புவோர் திருக்கோயில் அறங்காவலர் திரு சசிகுமாருடன் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தன்குளம் அணைக்கட்டுக்கு அருகே மலையடிவாரத்தில் உடைந்த கட்டிடம் இருந்தது. நான் நேரில் பார்த்திருக்கிறேன். அங்கு புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட முயன்றதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உடைந்த அந்தக் கட்டடத்தின் அருகே தொல்லியல் மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தனர். மேசைமீது புத்தர் சிலை ஒன்றை வைத்தனர் வணங்கினர். அந்த இடத்தில் நிலத்தைத் தோண்டவில்லை, மேலோட்டமாக கிளறிப்பாத்தார்கள். அமைச்சர் வந்திருந்தார், படைப் பிரிவினரும் வந்திருந்தார்கள், புத்தபிக்குகள் எவரும் அங்கு வரவில்லை.

படைப்பிரிவின் காப்பரண் நெடுங்காலமாகவே அங்கு உண்டு. படைவீரர் ஒருவரோ இருவரோ இருப்பார்கள். கடமைக்கு வராத நாள்களே கூடுதலானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சைவக் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை ஏதுமில்லை, பொங்கலுக்குத் தடையில்லை, வழிபாட்டுக்கு தடையில்லை என அமைச்சர் அறங்காவலரிடம் கூறியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

முழுமையான தகவல் அறியாமலே முச்சூலம் அகற்றியதாகத் தவறான செய்திகள் வெளியாகி சைவ உணர்வாளர்களின் மனம் புண்ணாகியது.

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குமிழமுனை வழியாகச் சைவ உணர்வாளர்கள் வழிபடு பயணமாக குருந்தக் குன்று சென்று குருந்த மரநிழலில் அமர்ந்து இருக்கும் சிவபெருமானை வழிபட்டு அருள் ஆசி பெற்று வருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் அவ்வாலயத்தின் அறங்காவலர் கருத்து வெளியிடுகையில்,

சூலம் முன்னர் பிடுங்கப்பட்டிருந்தது. எனினும் மீண்டும் அந்த இடத்தில் வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் பிடுங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் நேற்று காலை 10 மணியளவில் இரகசியமாக சென்று பார்த்த போது அவ்விடத்தில் சூலம் இல்லை எனவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!