ஹட்டனில் பாடசாலை மாணவருக்கு கொரோனா

ஹட்டனிலுள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயது மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் – குடாகம பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் R.R.S. மெதவெல குறிப்பிட்டார்.

இந்த மாணவர் இறுதியாக கடந்த 20 ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்.

இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவருடன் நெருங்கிப் பழகிய 37 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் கூறினார்.

12 ஆசிரியர்களும் மாணவனின் தாயுடன் பழகிய 6 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவருடன் தொடர்புபட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் R.R.S. மெதவெல குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 08 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் கொத்தணியில் இதுவரை 4,337 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகளவானோர் வெலிக்கடை சிறைச்சாலையுடன் தொடர்புடையவர்களாவர்.

இதேவேளை, ஒன்லைன் தொழில்நுட்பத்தினூடக குடும்பத்தினருடன் கலந்துரையாடுவதற்கு கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் லொஹான் ரத்வத்தே குறிப்பிட்டுள்ளார். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 56, 863 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் இதுவரை 48,617 பேர் குணமடைந்துள்ளனர். 7,968 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, சுகாதார அமைச்சில் இதுவரை 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில், அமைச்சின் பிரிவொன்றில் 8 பேர் தொற்றுடன் அடையாங்காணப்பட்டதுடன் மற்றுமொரு பிரிவில் 4 பேர் அடையாளங்காணப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன.

இதேவேளை, COVID -19 தடுப்பூசி ஏற்றுவதற்கான ஒத்திகை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேச வைத்தியசாலை ராகம போதனா வைத்தியசாலை, பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகிய மூன்று இடங்களிலும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

சுகாதார ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிகின்ற முன்னணி ஊழியர்களுக்கே, முதற்கட்டமாக COVID தடுப்பூசியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேற்கொள்ளப்படும் ஒத்திகை மூலம், தடுப்பூசி வழங்கப்படும் போது ஏற்படும் சிக்கல்களை அடையாளம் கண்டு அவற்றினை நிவர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

அத்துடன், நாளொன்றுக்குள் மற்றும் ஒரு மணித்தியாலத்திற்குள் எத்தனை தடுப்பூசிகளை வழங்க முடியும் என்ற மதிப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!