விமல் வீரவங்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவங்ச, பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தமை தொடர்பில் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை நியமிக்க வேண்டும் என நேற்றைய பத்திரிகை ஒன்றுக்கு விமல் வீரவங்ச கூறியுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கான உரிமை தனக்கு இல்லை என்பதை விமல் வீரவங்ச தெரிந்துகொள்ள வேண்டும் என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவருடைய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன், அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

எமது கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!