தடுப்பூசி விவகாரத்தில் இந்தியா படைத்த பெரும் சாதனை!

உலக அளவில் 10 கோடிக்கும் மேற்பட்டோரை நோயாளி ஆக்கிய கொரோனா வைரசின் பாதிப்புகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் கட்டுக்குள் இருப்பதோடு, தினசரி உயிரிழப்பும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது.

அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தற்போதும் அதிகமாகவே உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இந்த நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி மிகமுக்கியமாக ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் பல நாடுகளிலும் தடுப்பூசி தொடர்பான சோதனை நடந்து வருகிறது.

இதற்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், இதைத்தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய வீரர்களாக திகழும் முன்களப் பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 24 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 60 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டு உலக அளவில் குறுகிய நாட்களில் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நேற்று மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 60,35,660 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை தொடுவதற்கு அமெரிக்காவுக்கு 26 நாட்களும், இங்கிலாந்துக்கு 46 நாட்கள் ஆனதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர்அக்னனி நேற்று மாலை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள் 54,12,270 பேருக்கும், முன் களப்பணியாளர்கள் 6,23,390 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!