அச்சுவேலி சந்தை வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா! – புதிய கொத்தணி ஆபத்து.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி சந்தை வியாபாரிகள் நால்வருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோரை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பஸ் நடத்துநரின் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கும் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, வடக்கு மாகாணத்தில் நேற்று 10 பேருக்கு காரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகியவற்றில் இன்று 689 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் முசலி வாடியில் தொற்று ஏற்பட்டவருடன் நேரடித் தொடர்புடையவர். மற்றைய இருவரும் மன்னார் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.

அத்துடன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் அண்மையில் தொற்றாளாராக அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடையவர்” என்றும் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!