6-வது நாளாக தொடரும் மீட்புப்பணி: குடும்பத்தினர் போராட்டம்!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி நந்தா தேவி பனிப்பாறை உடைந்து தாலிகங்கா, அலக்நந்தா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று ஆற்றங்கரையில் ஒரு உடல் மீட்கப்பட்டது. இதுவரை 37 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 168 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. துண்டிக்கப்பட்ட கிராமங்களில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தபோவன் நீர்மின் திட்ட சுரங்கத்தில் சேறும், இடிபாடுகளும் சூழ்ந்து கொண்டதால் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த சுமார் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

சேறுகளை அகற்றி அவர்களை மீட்கும் பணியில் ராணுவம், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றை சேர்ந்த 450-க்கு மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 120 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றிவிட்டனர்.

நேற்று முன்தினம் சுரங்கத்தில் துளையிடும் பணியை தொடங்கினர். ஆனால், தாலிகங்கா ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், சிறிது நேரம் கழித்து மீட்புப்பணி தொடர்ந்தது.

நேற்று 6-வது நாளாக மீட்புப்பணி நீடித்தது. சேறுகளை அகற்றும் பணியும், துளையிடும் பணியும் ஒரே நேரத்தில் நடந்தன. ‘‘எத்தனை பேரை காப்பாற்ற முடியுமோ, அத்தனை பேரை காப்பாற்றுவோம்’’ என்று போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் தெரிவித்தார்.

இதற்கிடையே, சுரங்கத்தில் சிக்கி தவிப்பவர்களின் குடும்பத்தினர் நேற்று மின்திட்ட பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்களை சுரங்கத்துக்கு 100 மீட்டர் தொலைவிலேயே பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

தேசிய அனல்மின் கழகத்துக்கும், மாநில அரசுக்கும் எதிராக அந்த குடும்பத்தினர் கோஷமிட்டனர். தேவேஷ்வரி தேவி என்ற பெண் கூறியதாவது:-

தேசிய அனல்மின் கழக திட்டமே ஒரு சாபக்கேடாக அமைந்து விட்டது. இதற்காக முதலில் நிலத்தை இழந்தோம். இப்போது குடும்ப தலைவர்களை இழந்து விட்டோம். 6 நாட்கள் ஆகியும் 200 மீட்டர் தூரத்துக்கு கூட சேறுகளை அகற்றவில்லை. மந்தகதியில் மீட்புப்பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!