காரைநகர் டிப்போ ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலை ஊழியர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஏனைய சாலைகளின் ஊழியர்களை பணிக்கு அமர்த்தி பேருந்து சேவைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும் காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இன்றும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை 90 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர் இருவருக்கே கொரோனா நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

அதனால் காரைநகர் சாலையில் பணியாற்றும் 110 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் அடுத்த வாரமே பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. அதுவரை வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஏனைய சாலை ஊழியர்களை கடமைக்கு அமர்த்தி காரைநகர் பேருந்து சேவைகளை நடத்துமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!