தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் தீவிரமடையும் கொரோனா பரவல்!

தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது வந்தது. இருப்பினும், சில மாநிலங்களில் மட்டும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்தது. இதனால் அந்த மாநிலங்களைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்களும் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,584 பேருக்கு நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 85% பேர் வெறும் ஆறு மாநிலங்களில் மட்டும் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிலும், 60% கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடக, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இரண்டு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தேர்தல் நடத்துவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என அஞ்சப்பட்டது. இருப்பினும், கொரோனா பரவல் ஒட்டுமொத்த நாட்டில் அதிகரித்தபோதே, பீகாரில் வெற்றிகரமாகத் தேர்தல் நடத்தப்பட்டதால், இதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என என்றே எதிர்பார்க்கப்படுகிறது,

அதேபோல உயிரிழப்புகளும் மகாராஷ்டிராவிலேயே அதிகமாகப் பதிவாகியுள்ளது. அங்கு 54 பேரும், பஞ்சாபில் 17 பேரும், கேரளாவில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குகூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!