இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் –மேல் மாகாணத்தில் 5, 11, 13 தரங்களுக்காக பாடசாலைகள் மீள திறப்பு

மேல் மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 5, 11 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

ஏனைய தரங்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையிலும், தரம் 6 தொடக்கம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19 ஆம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்

அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின், இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் கடந்த மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடைவந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சினால் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த முடியாத நிலை காணப்படுவதாக, பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித நேற்று காலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சினால் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதிலாகவே பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாகவும், கல்வி அமைச்சு அவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை எனவும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை கல்வி அமைச்சு வழங்க தயாராக உள்ளதாகவும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!