வாழ்க்கைச் செலவினை கட்டுப்படுத்துவதற்கு உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பது சிறந்த தீர்வாகுமென ஜனாதிபதி தெரிவிப்பு

வாழ்க்கைச் செலவினை கட்டுப்படுத்துவதற்கு உள்நாட்டு உற்பத்தி மற்றும் வருமானத்தினை அதிகரிப்பது சிறந்த தீர்வாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் உலக சந்தையின் பலத்தினை தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதன்காரணமாகவே, நாட்டில் பயிரிடக்கூடிய 17 பயிர்களை கண்டறிந்து அவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்தியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போது நெல் நெல் கிலோ ஒன்றின் விலை 32 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதன் ஊடாக விவசாயிகளின் வருமானம் மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிலர் தவறான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் நாட்டை மீண்டும் அழிவுக்கு கொண்டுசெல்ல முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களின் பிரச்சினகளை அடையாளம் காணும் அரசாங்கம் அமைதியாக செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், கால்நடைகளுக்கு உணவளிப்பதற்கு புள்வெளிகள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், காடழிப்பை அரசாங்கம் ஒருபோதும் ஊக்குவிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முள்ளுத்தேங்காய் செய்கையினை நிறுத்தி பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!