மார்ச் 31ஆம் திகதிக்குள் தாயகம் திரும்புமாறு பிரான்ஸ் வாழ் பிரித்தானியர்களுக்கு உத்தரவு?

பிரெக்சிட் நிகழ்ந்ததால் பிரித்தானியா உட்பட அனைத்து ஐரோப்பிய நாட்டவரல்லாதவர்களும் 90 நாட்கள் விதி ஒன்றுக்கு உட்பட்டவர்களாகிறார்கள். அதன் தாக்கம் பிரான்சில் வீடு வைத்திருக்கும் பிரித்தானியர்களை எப்படி பாதிக்கிறது என்று பார்க்கலாம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சில பிரித்தானியர்கள் பிரான்சிலிருக்கும் தங்கள் வீட்டுக்கு வந்தார்கள். கொரோனா காலகட்டத்தில் அமைதியாக இருந்த தங்கள் வீடுகள் பாதுகாப்பானது என கருதியதால், அவர்கள் இங்கேயே இருந்துவிட்டார்கள்.

ஆனால், இப்போது அவர்கள் மார்ச் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பவேண்டும் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அது எந்த அளவுக்கு உண்மை, யாரெல்லாம் பிரித்தானியாவுக்கு திரும்பவேண்டும்?

பிரெக்சிட்டுக்கு முன், பிரான்சில் வீடு வைத்திருக்கும் பிரித்தானியர்கள் எப்போது வேண்டுமானாலும் பிரான்சுக்கு வரலாம், போகலாம். ஆனால் பிரெக்சிட் அதை மாற்றிவிட்டது.

ஜனவரி 1ஆம் திகதிக்குப் பின் பிரான்சில் வீடு வைத்திருக்கும் பிரித்தானியர்கள் எவ்வளவு நாட்கள் தங்கலாம் என்பதற்கு கால வரையறை வகுக்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த வரையறை அனைத்து பிரித்தானியர்களுக்குமானது அல்ல! உங்களுக்கு பிரான்சில் நிரந்தர வாழிட உரிமம் இருந்தால், நீங்கள் இம்மாதம் 31ஆம் திகதி பிரான்சை விட்டு வெளியேற வேண்டியதில்லை.

என்றாலும், உங்களிடம் வாழிட உரிமம் இல்லையென்றால், நீங்கள் அதற்காக விண்ணப்பிக்கவேண்டும்.

உங்களிடம் விசா இருந்தால், அதில் கொடுக்கப்பட்டுள்ள காலவரையறை வரை நீங்கள் பிரான்சில் இருக்கலாம்.

நீங்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவராக இருந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றின் பாஸ்போர்ட் உங்களிடம் இருந்தாலும், நீங்கள் காலவரையறையின்றி தங்கலாம். இதில் எதுவுமே உங்களுக்குப் பொருந்தாது என்றால், நீங்கள் மார்ச் 31 அன்று பிரான்சிலிருந்து வெளியேறவேண்டியிருக்கும்.

இதற்கான காரணம், 2021 ஜனவரி 1 முதல், அமெரிக்கர்கள், கனேடியர்களைப்போன்ற மற்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத நாட்டவர்களைப்போலவே, பிரித்தானியர்களும் அந்த 90 நாட்கள் விதிக்கு உட்படுகிறவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதுதான்.

ஆக, பிரித்தானியர்கள் 180 நாட்களில் 90 நாட்கள் மட்டுமே Schengen மண்டலத்தில் செலவிடமுடியும், தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளிகள் விட்டோ.

எனவே, நீங்கள் ஜனவரி 1 முதல் பிரான்சில் இருந்தால், மார்ச் 31உடன், உங்கள் 90 நாட்கள் காலவரையறை முடிவுக்கு வருகிறது. ஆகவே, அன்று நீங்கள் பிரித்தானியாவுக்கு திரும்பியாகவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!