கிழக்கு லடாக்கில் பதற்றம் தணிந்தது: சீன ராணுவம் தகவல்!

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சிகளால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல், உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இருதரப்பும் அங்கே படைகளை குவித்ததால் கடந்த மே மாதம் முதல் பதற்றம் நீடித்து வந்தது.

ஆனால் இருதரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக அங்கே சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வந்த பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து இரண்டு நாட்டு ராணுவங்களும் சமீபத்தில் தங்கள் படைகளை விலக்கிக்கொண்டன.

இதனால் இந்தியா-சீனா இடையேயான பதற்றம் தணியத்தொடங்கி இருக்கிறது. அதேநேரம் இருநாட்டு அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்னும் பல இடங்களில் படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்திருப்பதாகவும், அங்கு படைகளை விலக்குவதற்கு இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரும், மூத்த ராணுவ அதிகாரியுமான ரென் குவாகியாங் கூறியுள்ளார். அதேநேரம் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்னும் நிறுத்தப்பட்டிருக்கும் மீதமுள்ள படையினரை விலக்குவது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!