வரலாற்றிலேயே முதல் முறையாக கும்பமேளாவின் கால அளவு குறைப்பு!

உத்தரகாண்டின் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புகழ்பெற்ற கும்பமேளா நடைபெறுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கும்பமேளாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கங்கையில் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றனர். பொதுவாக சுமார் 3½ மாதங்கள் நடைபெறும் இந்த கும்பமேளா கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 14 முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரை ஹரித்வாரில் நடந்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு கும்பமேளா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக தீவிரமாக நடந்து வந்த நிலையில்தான், கொரோனா எனும் பெருந்தொற்று உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவில் குறைந்து வந்த இந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 59 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒரேநாளில் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இவ்வாறு நாட்டில் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இதில் குறிப்பாக கும்பமேளா நடைபெறும் உத்தரகாண்டுக்கு சிறப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியது. கும்பமேளா நடைபெறும் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது, பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளை உத்தரகாண்ட் அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கி இருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு கும்பமேளாவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி சிறப்பு அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இதில் முக்கியமாக இந்த ஆண்டு கும்பமேளா வெறும் ஒரு மாதமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 1 முதல் 30-ந்தேதி வரை இந்த கும்பமேளா நடைபெறுகிறது.

இதில் ‘ஷாகி ஸ்நான்’ எனப்படும் முக்கியமான புனித நீராடல் ஏப்ரல் 12, 14 மற்றும் 27-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் சைத்ர பிரதிபாடா மற்றும் ராம நவமியையொட்டி முறையே ஏப்ரல் 13 மற்றும் 21-ந்தேதிகளிலும் அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கும்பமேளாவையொட்டி பக்தர்கள் புனித நீராடும் இடங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ள மாநில அரசு, கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதாவது ஹரித்வாருக்கு வருவதற்கு முந்தைய 72 மணி நேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்கள் அதற்கான சான்றிதழை கும்பமேளா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற கும்பமேளாவின் கால அளவு ஒருமாதமாக குறைக்கப்பட்டு இருப்பது வரலாற்றிலேயே முதல் முறையாகும்.

கும்பமேளா நெருங்குவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மக்கள் கடுமையான கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற மத்திய-மாநில அரசுகள் மக்களை வலியுறுத்தி உள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!