புதிய உச்சம் தொட்ட கொரோனா: ஒரே நாளில் 312 பேர் பலி!

இந்தியாவில் இந்த மாதம் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மக்களிடையே கொரோனா பற்றிய அச்ச உணர்வு குறைந்து வருவதாலும், பாதுகாப்பு அம்சங்களை தவிர்த்து வருவதாலும் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த நிலை மாறி இப்போது கொரோனா வீறு கொண்டு எழுந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் 62 ஆயிரத்து 258 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று இது மேலும் அதிகரித்து 62 ஆயிரத்து 714 என பதிவாகி இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 624 ஆக அதிகரித்து இருக்கிறது.

இது உலகளவில் இந்தியாவை மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ள 3-வது நாடாக காட்டுகிறது. முதல் இரு இடத்தில் அமெரிக்காவும், பிரேசிலும் உள்ளன.

கொரோனாவின் கோரப்பிடியில் தவித்து வரும் மராட்டியத்தில் நேற்று முன்தினம் 36 ஆயிரத்து 902 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று கொஞ்சம் சரிந்து 35 ஆயிரத்து 726 ஆக பதிவாகி இருக்கிறது.

கேரளாவில் 2,955 பேரும், கர்நாடகத்தில் 2,886 பேரும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கொரோனாவால் இந்தியாவில் ஏற்படுகிற உயிரிழப்பு 100-க்குள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இப்போது அந்த நிலை மாறி 200-ஐ கடந்து, நேற்று 300-ஐயும் தாண்டி விட்டது. காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 312 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த ஆண்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயிரிழப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி 336 பேர் பலியாகி இருந்தது நினைவுகூரத்தக்கது.

நேற்று உயிரிழந்த 312 பேரில் மராட்டியத்தில் மட்டுமே சரிபாதிக்கும் அதிகமாக 166 பேர் பலியாகி இருப்பது அந்த மாநில மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப்பில் 45 பேரும், கேரளாவில் 14 பேரும், சத்தீஷ்காரில் 13 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 552 ஆக உயர்ந்துள்ளது.

இது உலகளவில் கொரோனா உயிரிழப்பில் இந்தியாவை அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோவைத் தொடர்ந்து 4-வது இடத்தில் வைத்துள்ளது.

அந்தமான் நிகோபார், ஆந்திரா, அருணாச்சலபிரதேசம், அசாம், தத்ராநகர் ஹவேலி தாமன் தியு, லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா ஆகிய 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.

இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம், 1.35 சதவீதமாக உள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 29 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். சரியாக 28 ஆயிரத்து 739 பேர் குணம் அடைந்ததில், மராட்டிய மாநிலத்தவரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 523 பேர் ஆகும். பஞ்சாப்பில் 2,141 பேரும், கேரளாவில் 2,084 பேரும் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 1 கோடியே 13 லட்சத்து 23 ஆயிரத்து 762 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மீட்பில் இந்தியாதான் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. இங்கு மீட்பு விகிதம் 94.59 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது. 4 லட்சத்து 86 ஆயிரத்து 310 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். இது மொத்த பாதிப்பில் 4.06 சதவீதம் ஆகும்.

மராட்டியத்தில் அதிகபட்சமாக 3 லட்சத்து 4 ஆயிரத்து 809 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கேரளாவில் 24 ஆயிரத்து 541 பேரும், பஞ்சாப்பில் 23 ஆயிரத்து 271 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மத்திய, மாநில அரசுகள் தற்போது கூட்டு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் வரும் வாரங்களில் பரவல் மறுபடியும் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!