வாள்கள் இறக்குமதி குறித்த விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கண்டறியப்பட்ட வாள்கள் மற்றும் வேறு ஆயுதங்கள், இலங்கைக்கு எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டன தொடர்பில் கண்டறிவதற்காக, இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களை உள்ளடக்கி நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பொலிஸ் குழுக்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் செயற்பட்டு வருகின்றன எனவும் இக்குழுக்கள், சட்ட மா அதிபரால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றன என்றும், சட்ட மா அதிபர் அலுவலகத்தால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட 6 ஆயிரம் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள், உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டு, கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயா குழுவினால் நேற்று ஆராயப்பட்டது.

இதன் போதே, சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜராகியிருந்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி அவந்தி பெரேரா, மேற்கண்ட விடயம் தொடர்பில் மன்றில் அறிவித்தார். அத்துடன், அதனை உறுதிப்படுத்தக்கூடிய பொலிஸ் மா அதிபரின் கடிதமொன்றையும், நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, மேற்படி மனுவை, தொடர்ந்து கொண்டு நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில், மனுதாரரிடம் கேட்டு, மே 6ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிவிக்குமாறு, மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவுக்கு உத்தரவிட்ட நீதியரசர்கள் குழு, இந்த வழக்கை, மே 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

மேற்படி வாள்கள் மற்றும் ஆயுதங்களை, இலங்கைக்கு இறக்குமதி செய்தவர்கள் யார், அதற்கான நிதி உதவிகள் எவ்வாறு கிடைக்கப்பெற்றன என்பது தொடர்பில் கண்டறிவதில், பிரதிவாதிகள் தோல்வி கண்டுள்ளனர் என, பேராயர் தனது ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!