புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெயை பகிரங்கமாக அழிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

இறக்குமதி செய்யப்பட்டுள்ள புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெயை பகிரங்கமாக அழிக்குமாறு, அகில இலங்கை தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், குறித்த தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி செய்யப்படும் விடயத்தில் பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என, அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உடலுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொடர்ச்சியாக இறக்குமதியாளர்களினால் கொண்டுவரப்படுவதால், மீள் ஏற்றுமதி முறையாக மேற்கொள்ளப்படாது எனவும், அகில இலங்கை தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட உடலுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய், தூய்மையான தேங்காய் எண்ணெயுடன் கலந்து சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும், அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சமூகத்தில் பரபரப்பான விவாதங்கள் முன்னெடுக்கப்படும் போது, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதாகவும், அகில இலங்கை தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தர நிர்ணய நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் வகைகளை மாத்திரமே, பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதாகவும், அவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய aflatoxin இரசாயனம் உள்ளடக்கப்படவில்லை எனவும், அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!