கற்பழிப்பு புகாரில் எம்எல்ஏ-வை கைது செய்திருக்க வேண்டும்- பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தல்

கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள பா.ஜனதா எம்எல்ஏ-வை உடடியாக கைது செய்திருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக கூறினார்.

ஆனால் எம்எல்ஏ இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் ‘‘எனது தந்தை இறந்த பின்னரும் கூட, எனக்கு எப்படி நீதி கிடைக்கும்? உள்பட பல்வேறு கேள்விகள் எழுகிறது. சிபிஐ விசாரணை சிறந்ததுதான். ஆனால், அவர் விசாரணையில் தலையிடக்கூடும். இதனால் முதலில் எம்எல்ஏ-வை கைது செய்திருக்க வேண்டும். தற்போது நான் எனது மாமாவை நினைத்துதான் அச்சம் அடைகிறேன்’’ என்றார்.

இதற்கிடையில் உத்தர பிரதேச டிஜிபி கூறுகையில் ‘‘வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் கைது செய்ய வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்வார்கள்’’ என்றார்.

முன்னதாக, உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகாரளித்திருந்தார். இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்எல்ஏவின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், ஒரு பழைய வழக்கு தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை பப்பு என்னும் சுரேந்திரா சிங்கை கடந்த 5-ம்தேதி கைது செய்த போலீசார் உன்னாவ் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட சுரேந்திரா சிங்குக்கு உரிய சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் எம்எல்ஏ. தடுத்து வருவதாக நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து தனக்கு ஏற்பட்ட கொடுமையை கூற பாதுகாவலர்கள் அனுமதிக்காததால் முதல்வர் வீட்டின் அருகே அவர் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையில், உன்னாவ் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேந்திரா சிங்கின் உடல்நிலை கடந்த மாதம் 8-ம் தேதி இரவு திடீரென்று மோசம் அடைந்ததால் உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 9-ம்தேதி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பாஜக எம்எல்ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு மருத்துவர்கள் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என மாநில முதன்மை செயலாளர் அறிவித்தார்.

இதற்கிடையே, மாநில போலீசார் அலுவலகத்துக்கு பா.ஜ.க. எம்எல்ஏ குல்தீப் சிங் கெங்கார் நேற்று நள்ளிரவு வந்தார். அவர் சரண்டர் ஆக போகிறார் என நிருபர்கள் அங்கு குவிந்தனர். ஆனால், அவர் நிருபர்களிடம் பேசுகையில், நான் எங்கும் ஓடிவிடவில்லை என்பதை காட்டவே இங்கு வந்துள்ளேன். நான் சுத்தமானவன். இங்குதான் இருப்பேன். என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது என்றவர், உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!