உபியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து மோடி உண்ணாவிரதம் இருப்பாரா? ராகுல்காந்தி கேள்வி

உ.பி.யில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்து மோடி உண்ணாவிரதம் இருப்பாரா என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கண்டித்து இன்று தனது அலுவல்கள் பாதிக்காத வகையில் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உத்தரப்பிரதேசத்தில் மகளுக்காக நீதி கேட்டு போராடிய தந்தைக்கு நேர்ந்த கொடூரம் வெட்கித்தலைகுனிய வேண்டிய செயலாகும். மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டன.

இதனைக் கண்டித்தும் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் தந்தை சில நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார்.

அந்த எம்.எல்.ஏ.க்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பேசும் வீடியோவையும் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தன்னை எம்.எல்.ஏ.வின் சகோதரர்கள் ஈவுஇரக்க மின்றி தாக்கியதாக பெண்ணின் தந்தை கூறியுள்ளார். அந்த வீடியோ சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!