யாழில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து இராணுவத் தளபதி விடுத்த முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைல் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 760 பேரின் மாதிரிகள் நேற்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடமாகாணத்தில் 26 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, யாழ்ப்பாணத்தில் 24 பேரும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இருவர் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதையடுத்து சுமார் 3000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு தேசிய செயலணியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், யாழில் எதிர்வரும் 4 முதல் 5 நாட்களுக்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, யாழின் பல முக்கிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 564 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும், 228 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 272 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், தொடர்ந்தும் 2 ஆயிரத்து 697 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், மேலும் இரு உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்க 595 ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா பகுதியைச்சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், பதுளை யாழ்வெல பகுதியைச்சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!