இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும்: நாமல் தெரிவிப்பு!

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

திக்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்,

மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பில் ஆளுங் கட்சி என்ற வகையில் நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

சில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.அவற்றை நாம் கட்சித் தலைவர்கள் கூட்டங்களில் முன்வைத்திருக்கின்றோம். இது மக்களின் வாக்குரிமையாகும்.

யாராவது மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு இணங்கவில்லை என்றால், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் போது, அதனை முழுமையாக மாற்றுகின்ற அளவுக்கு கொண்டுவர வேண்டும். தற்போது மாகாண சபை இருக்கின்றது, ஆளுநர் இருக்கின்றார் மற்றும் அதிகாரிகளும் இருக்கின்றார்கள்.

ஆனால் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட தரப்பினர்தான் இல்லை. ஆனால் ஏனைய அனைத்து விடயங்களும் செயற்படுத்தப்படுகின்றன.

பல பாடசாலைகள், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பல நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வீதிகள் என மாகாண சபைகளின் கீழ் உள்ளன. இதன்படி அவற்றை நிர்வகிப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு யார் ஆலோசனைகளை வழங்குவார்கள்,

இது தொடர்பில் எமக்கு பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.இந்த நிலையில், இந்த ஆண்டு முடிவுடைவதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என நாம் நம்புகின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!