இந்திய பயணிகளுக்கு தடை விதித்த முன்னணி நாடு!

இந்தியாவில் கொரோனா மீண்டும் உச்சமடைந்துள்ள நிலையில், அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்து ஐக்கிய அமீரகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை இப்போது மிக மோசமாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில், இந்த பட்டியலில் புதிய நாடாக தற்போது ஐக்கிய அமீரகமும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 10 நாட்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் நிலைமையை ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாகப் பயணம் செய்த வெளிநாட்டுப் பயணிகளும் ஐக்கிய அமீரகம் வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகம் குடிமகன்கள், சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சிறப்புத் தூதர்கள் ஆகியோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் துபாயிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் விமானங்கள் தொடர்ந்து இயங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எமிரேட்ஸ், எட்டிஹாட், ஃப்ளை துபாய், ஏர் அரேபியா ஆகிய விமானங்கள் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு இந்திய செல்லும் விமானங்களின் முன்பதிவுக்குத் தடை விதித்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!